தயை செய்து பெரியவர் Hari Krishnan ஜி சொல்வதைப் படியுங்கள். பின்பற்றுங்கள்.
//.. இறைவனுடைய ஆயுதத்தை வீட்டில் வைத்திருப்பது முக்கியமில்லை. அதை அன்றாட வழிபாடு முதலானவற்றால் போற்றுவது மிகமிக முக்கியம். ...//
_________________
Hari Krishnan
காலையில் Iyappan Krishnan ஃபோன் செய்து பேசிக்கொண்டிருக்கும்போது, 'அண்ணே, வீட்டுல இந்த வேல் வச்சி வழிபடறதப் பத்தி எழுதுங்கண்ணே. சஷ்டி கவச சச்சரவுக்கு அப்புறம் நிறைய பேரு ஒண்ணரையடி உயர வேலெல்லாம் வீட்டுல வச்சிருக்கறதா ஃபோட்டோல்லாம் போடறாங்க' என்று சொன்னான். சஷ்டி கவச சர்ச்சை இப்படியெல்லாம் நன்மையை உண்டாக்கியிருக்கிறது என்று கேள்விப்பட்டதில் சந்தோஷமாக இருந்தாலும், ஒண்ணரையடி நீள வேலா, அதுவும் வீட்டிலா' என்று சற்று மிரண்டுதான் போனேன். மிகச் சுருக்கமாக சில முறைகளைச் சொல்கிறேன்.
நான் சென்னை அண்ணா நகரில் இருந்தபோது, மைலாப்பூர் கிரி டிரேடர்ஸில் செப்பு வேல் வாங்கி வந்து சுமார் இருபது வருடங்களாக என் பூஜையில் வைத்திருக்கிறேன். 'வேல் எவ்வளவு நீளமிருக்கிறதோ அவ்வளவு பவர் ஜாஸ்தி என்று நினைத்தார்களோ என்னவோ ஒன்றரையடி நீளத்துக்கெல்லாம் வேல் வாங்கி வைக்கிறார்கள் போலிருக்கிறது. வீட்டில் வைத்து வழிபடும் வேல் (வெள்ளியிலோ அல்லது செப்பிலோ இருக்கலாம்) ஒன்பது அங்குல நீளத்துக்குமேல் இருப்பது உசிதமில்லை. ஒன்பதங்குலத்துக்கு மேலே இருக்கும் வேலென்றால் அது ஆலயங்களில் வைக்கத் தகுந்தது. அன்றாட பூஜை போதாது; அபிஷேகம் முதலான அனைத்து ஆலய உபசாரங்களையும் செய்யவேண்டும். வேல் வைக்கிறோம் என்றால் தனியாக வைப்பதில்லை. வீட்டில் வைத்திருக்கும் முருகன் படத்துடன் சேர்த்து வைக்கவேண்டும். படத்தைவிட வேல் உயரமானதாக இருக்கக்கூடாது. எல்லா ஆலயங்களிலும் பார்க்கலாம். மூர்த்தியின் புருவம் அளவுக்கு உயரமாக இருக்கலாம். அதற்கு மேல் இருக்கக்கூடாது. எல்லா ஆலயங்களிலும், விக்கிரகங்களிலும் இப்படித்தான் இருக்கும். உலகின் மிகப்பெரிய முருகன் சிலையின் வேல் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதைப் பாருங்கள்.
https://www.bing.com/images/search…
மூர்த்தியைவிட வேல் ஒன்றரைப் பங்கு உயரம் இருப்பது போன்ற உக்கிரமான தோற்றத்தை, 'போரூர்' மாதிரியான போர்த்தலங்களில்தான் பார்க்க முடியும். அங்கே போருக்குக் கிளம்புகிறான். அவனுடைய வேல் அதிநீளமாகத்தான் இருக்கும். (அது ஒருபுறம். சுவாமிமலை போன்ற தலங்களில் முருகனுக்குக் குலிசாயுதம்தான் இருக்கும். அது வேல் இல்லை. அதன் வடிவமே சற்று நீளவாக்கில், பக்கங்களில் இரண்டு வளைவுகளோடு கூடியதாக இருக்கும்.)
ஆலயங்களில் வேலை முருகனுடைய வலதுதோளில் சாத்தி வைப்பார்கள். இது பிரயோக ஸ்தானம். அதாவது. 'எப்போதும் தயார். எதுவந்தாலும் எறிவேன்' என்ற நிலையில் மூர்த்தியை வைத்திருக்கிறோம் என்று பொருள். இந்த நிலையில் மூர்த்தியின் உக்ரம் அதிகம். அப்படி வைத்தால் மீண்டும், ஆலயங்களில் கையாள்வதைப் போல அன்றாட பூசை, அதற்கான ஆசாரமுறைகள் எல்லாவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும். நமக்குக் கொஞ்சம் சாதுவான மூர்த்தி போதுமென்றால், இடது தோளில் சாத்தலாம். இது ஆயத்த ஸ்தானம். I am ready. But not in action. வீட்டில் வைத்து வழிபட இது உகந்த நிலை. கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கலாம்.
என் பூஜையிலுள்ள வேலின் படத்தை இணைத்திருக்கிறேன். படமெடுப்பதற்காக பூஜையைவிட்டு நகர்த்தி, ஸ்டூலின் மீது வைத்திருக்கிறேன்.
வேலைப் படுக்கவைப்பது, தரையில் கிடத்துவது போன்ற காரியங்கள் அறவே தவிர்க்கப்பட வேண்டியவை. ஒன்று படத்தின்மீதோ மூர்த்தியின் மீதோ சாத்தி வைக்கலாம். அல்லது நடுவில் துளையோடுகூடிய சிறிய பலகையில் செருகி வைக்கலாம். நான் சென்னை அண்ணா நகரில் இருந்தபோது அங்கே சந்தோஷ் ஸ்டோர் என்றொன்று உண்டு. பூங்கொத்துகளைச் செருகி வைப்பதற்காக சிறிய அளவில், முட்களோடு கூடிய கனமான உலோக அமைப்பு அங்கே கிடைத்தது. இது கனமாக இருக்க வேண்டியது முக்கியம். இல்லாவிட்டால் செருகி நிறுத்தும்போது வேல், பின்பக்கமாகச் சாய்ந்துவிடும். இந்தச் செருகில்தான் வேலை நிறுத்தி வைத்திருக்கிறேன்.
இறைவனுடைய ஆயுதத்தை வீட்டில் வைத்திருப்பது முக்கியமில்லை. அதை அன்றாட வழிபாடு முதலானவற்றால் போற்றுவது மிகமிக முக்கியம். வீட்டில் சாளகிராமத்தை வைத்திருந்தால் அதை எப்படிக் கையாளவேண்டும் என்பதற்கு வேளுக்குடி சுவாமிகள் விரிவான முறைகளைச் சொல்வார். சாளகிராமத்தை வைப்பதற்கான சிறு உலோகக் குடுவை எந்த அளவில் இருக்கவேண்டும் என்பது உட்பட கணக்கிருக்கிறது. அப்போதுதான் சாளகிராமத்தின்மீது நகம்படாமல், அந்தக் குடுவையில் விரலை நுழைத்து, வெளியே எடுத்து நீராட்டி, மீண்டும் அதற்குரிய இடத்தில் வைக்க முடியும். அப்படி 'இங்கே ஸ்வாமி இருக்கிறார்' என்ற பாவனையோடு நடந்துகொள்ளவேண்டும். ஸ்வாமிக்கே அப்படியென்றால், ஸ்வாமியுடைய ஆயுதத்தை எப்படிக் கையாளவேண்டும் என்பதை இதற்குமேல் விரிக்க வேண்டியதில்லை.
https://m.facebook.com/story.php?story_fbid=3729827387033990&id=100000202962494
No comments:
Post a Comment