Saturday, 15 January 2022

பட்டி ஆடுகள் இல்லை 

பத்திற்கும் மேற்பட்ட மாடுகள் இல்லை 

பட்டி படல் கட்ட வேண்டியதில்லை 

படல் கட்ட மின்ன மரங்களை தேடி அலைய வேண்டியதில்லை 

பனை நார் கிழிக்க அவசியமில்லை

ஒண்டுகளை பாதுகாக்க வேண்டியதில்லை

கரையான் அரிக்காமல் கம்பைகளை காக்க வேண்டியதில்லை

அடுப்பு கூட்ட கல் தேடி பழைய இடம் போக வேண்டியதில்லை

சாமிகளை தேடி கரணம் போட வேண்டியதில்லை 

பச்சமாவு இடிக்க அவசியமில்லை

அரசாணிக்காய் பொரியல் செய்ய ஆட்கள் இல்லை

முடக்கத்தான் கொடி தேடி கால் முள் தைக்க வேண்டியதில்லை

சோழக்கட்டைகள் பிடுங்கி காடு சுத்தப்படுத்த தேவையில்லை 

மாடுகளை குளிப்பாட்ட வேண்டியதில்லை

கன்று கழுவையில் பின் உதை வாங்க ஆள் இல்லை..

பட்டை தீட்ட காளை கொம்புகள் இல்லை 

காளையை ஈன்ற நாட்டு மாடுகள் இல்லை 

தார் முள் குத்திய உழைக்கால் தடிகள் இல்லை

சில நேரத்தில் நம் காலை கூட பதம் பார்க்கும் கூரிய கலப்பைகள் இல்லை

ஏறு பூட்டிய நுகங்கள் இல்லை

அத்தி கொழுந்து இல்லை 

இழந்தை கொழுந்திற்கோ இனி வேலை இல்லை 

தெப்பக்குளம் கட்ட காலையிலிருந்து சாணி சேகரிக்க வேண்டியதில்லை

காப்பு கட்டுவார்கள் என பட்டி காக்கவில்லை

காவி பூச இனி அவசியமில்லை

மஞ்சள் கொத்துக்கள் வாங்கவேண்டியதில்லை

காவல் காக்கும் இரண்டு நாய்கள் இல்லை

உறவினருக்கு இனி இடமில்லை 

மாலை நேரத்தை எதிர் நோக்கும் குழந்தைகள் இல்லை

கட்டில் போட்டு அமர பெரியோர்கள் இல்லை

பட்டிப் பொங்கல் வைக்க மங்கைகள் இல்லை

சாமி கும்பிட இங்கு ஆட்களும் இல்லை

விளக்கு மாவு எடுக்க இன்றய குழந்தைகளுக்கு தெரிவதில்லை

"அரசனம் பட்டியாரே அரசனம் கைத்தண்ணி பட்டியாரே கைத்தண்ணி 
உண்ணுன்னு பட்டியாரே உண்ணுன்னு
வாய்கழுவு பட்டியிரே வாய்கழுவு"
இவ்வார்த்தைகள் காதுகளில் கேட்கவில்லை

கொடுத்ததும் பிரசாதம் உண்ணும் மாடு இல்லை

வருடத்தில் ஒரு நாள் விருந்து உண்ணும் சங்கராந்தி(நாய்) இல்லை 

வெண் பொங்கலில் விருந்து உண்ணும் பழக்கமும் இல்லை

பல பொரியல் கூட்டுப் பலகாரம் இல்லை

கொட்டு கொட்டி தெப்பக்குளத்தில் கன்றுகள் ஓட்ட சிறுவர்கள் இல்லை

சூழ்ந்தாடும் இளைஞர்கள் இல்லை 

பால் பொங்க வைத்து அடுப்பு அனணயவில்லை

இறுதியாய் கொல்லிக்கட்டையில் சுத்திப்போடும் பெரியவர்கள் இல்லை..

தலையில் சும்மாடு கூட்டி பொருட்கள் அனைத்தும் வீடு கொண்டுவர அவசியமில்லை

இது அனைத்தும் இருந்தது அன்று..

எதுமே இல்லை இன்று.. அனைத்தும் கண்டு பழகி அதில் வாழ்ந்தவன் நான் இன்று வீட்டிலேயே தொலைக்காட்சி முன் கழிகிறது மாட்டுப்பொங்கல் , மனக்குமுறலுடன்...

ஈடு கட்ட முடியாத இழப்புடன் வாழ்க்கை... 
மூலதனமான விவசாயமே இல்லாத கிராமங்கள்...
உணவுக்கான பஞ்சம் வெகு தூரத்தில் இல்லை...
நம் பண்டய நாகரீகத்தை அழிக்க வெளியிலிருந்து ஒருவர் வர அவசியமில்லை..
விவசாயத்தையும் விவசாயியையும் மதிக்கும் குடியானவன் கூட குறைந்து விட்டனர்..
🐄🐂🐃🐎🐏🐑🐐🐕🐓🦃🐇
*மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள்  சொந்தங்களே...*
🐮🐄🐄💐

Wednesday, 5 January 2022

காப்புக்கட்டு பற்றி சிறு விளக்கம்

1. ஆவாரம் பூ
2. பீளைப்பூ
3. வேப்பிலை
4. தும்பை செடி
5. நாயுறுவி செடி
6. தலைப்புள்
என 5 வகையான செடிகள் காப்புகட்டிற்கு பயண்படுத்த வேண்டும்.

ஆனால் தற்காலங்களில் 3 வகை மட்டுமே பயண்படுத்துகிறார்கள்

தைமாதம் முதல் உத்ராயணத்தில் ஏற்ப்படும் பருவ நிலை மாற்றத்தால் நிறைய நோய்கள் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும்.

மார்கழிமாதம் ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் அதிக கதிர்வீச்சு பாதிப்பு வராமல் இருக்க வாசலில் கோலமிட்டு மாட்டுசானத்தில் பூசனிப்பூ வைத்திருப்பார்கள்.

மார்கழிமாதம் வைகுண்டம் செல்ல வேண்டிய முன்னோர்கள் இங்கேயே தங்கிவிடாமல் இருக்க அவர்கள் வாசனையை நீக்க அவர்கள் பயன்படுத்திவந்த பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள்.

மேலும் பருவ நிலை மாற்றத்தால் நோய் தொற்று வராமல் இருக்க வீட்டிற்கு சுண்ணாம்பு பூசி
பயன்படுத்தாத பழைய பொருட்களை எரிப்பார்கள் 
காப்பு கட்டுவார்கள் இது போகி பண்டிகையாகும்.

1)தைமாதம் மகர மாதம் தட்சிணாயணம் முடிந்து உத்திராயணம் ஆரம்பமாகும் காலம் சூரியன் வடக்கு நோக்கி நகர்வது போல் தோற்றம் வரும். பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரிக்கும் .
சூரியனின் தீட்சன்யம் அதிகமாக பூமியில் விழும்  இதற்கு கரிநாள் என பஞ்சாங்கத்தில் போடப்பட்டிருக்கும். இந்த வெப்பத்தின் தாக்கம் பல நோய்களை கொண்டுவரும்.

நமது கிராம்ப்புறங்கில் நடைபயணம் செய்பவர்கள் இந்த வெப்ப தாக்கம் வராமல் இருக்க ஆவாரம் பூவை தலை பாகைக்குள் வைத்து கட்டிக்கொண்டு செல்வார்கள் சில கிராமங்களில் சமையல் அறையில் அதிக உஷ்ணம் வராமல் இருக்க ஆவாரம் பூவை கொத்தாக் வைத்திருப்பார்கள்.
உஷ்ணதாக்கத்தால் உடல் சமநிலை இழக்காமல் இருக்க ஆவாரை பயன்படும் 
( மேலும் மகர சங்கராந்தி நுழையும் காலம் இம்மாத சங்காரகனால் அதிகபாதிப்பு தைமாத்தில் வரும் இதனை தடுக்கவும் ஆவாரை பயன்படும்)

2) பீளைப்பூ
இது உடலில் உள்ள நீர்சத்துக்களையும் தாதுக்களையும் சமநிலையில் வைக்கும் 
உஷ்ணத்தால் கிட்னி பாதிக்கப்படாமல் பாதுகாக்கும்.

3) உஷ்ணத்தால் சருமம் பாதிக்கப்பட்டு அம்மை தோல்நோய்கள் வராமல் இருக்க வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

4) நாயுருவி
வெப்பத்தால் பக்கவாதம் ( sunstroke) வராமல் இருக்க நரம்புமண்டம் பாதிக்கப்படாமல் இருக்க புதனிற்குறிய நாயுருவி காப்புக்கட்டிற்கி பயன்படுத்தப்படுகறது.

5) தும்பை செடி
நல்ல எதிர்ப்புசக்தியையும் ரத்தத்தில் மற்றும் உடலில் உள்ள முக்கிய நீர் பகுதி இதயத்தை நுரையீரலை கபாலத்தை நாசியை சூழ்ந்துள்ள நீர்ப்பகுதிகளில் நோய்தொற்று வராமல் பாதுகாக்கவும் மயக்கம் வராமல் பாதுகாக்கவும் பிதுர்களின் தோஷம் வராமலும் தடுக்கிறது.
( மரபணு நோய்)

6) தலைப்புள் கணம்புள் என்றும் சொல்வார்கள்.
( கணம்புள் நாயனார் தன் இருப்பிடத்தை குளிர்விக்க இதனை பயன்படுத்தினார்)
இது வீட்டிற்குள் உஷ்ண பாதிப்பை தராமல் உள்வெப்பநிலையையாக ( AC போல்) வைக்க காப்புகட்டப்படுகிறது.

அனைவரும் காப்புக்கட்டுங்கள்.
நம்முன்னோர்கள் நமக்கு வழங்கிய ஆரோக்ய வாழ்வின் பாரம்பர்யத்திற்கு நன்றி சொல்லுங்கள்.

*அனைவரும் நல்ல ஆரோக்யத்துடன் இருங்கள்*🙏🙏

Tuesday, 4 January 2022

ஆன்லைன் சூதால் மற்றுமொரு அழகிய குடும்பம் சிதைந்திருக்கிறது

ஆன்லைன் சூதால் மற்றுமொரு அழகிய குடும்பம் சிதைந்திருக்கிறது. பார்க்ளேஸ் வங்கியில் வேலை. ஆண்டுக்கு 28 லட்சம் சம்பளம். அத்தனை அழகான இரண்டு பிள்ளைகள் என வரம் வாங்கி வாழ்ந்திருந்த வாழ்வை, ஆன்லைன் ரம்மி ஒரு நொடியில் முடித்து வைத்த கொடூரத்தால் மனம் பற்றி எரிகிறது. மற்ற மரணங்கள் போல இதிலும் சூது விளையாட்டாய்த்தான் ஆரம்பித்திருக்கிறது. பாதியில் விட முடியாமல் நண்பர்களிடத்தில் கடன் பெற்றும் விளையாடியிருக்கிறார். ஒரு கோடிக்கு மேல் இழந்து பரிதவிக்க அப்போது தான் இது மனைவிக்கு தெரிய வந்திருக்கிறது. பிரச்சினை வெடிக்க, கோபத்தில் மொத்த குடும்பத்தையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 

ஆன்லைன் சூதில் வெல்வது மிகமிகக் கடினம். அதன் RNG (Random Number Generator )அல்காரிதம் அதிநுணுக்கமாக உருவாக்கப்பட்டது. நியாயமாக இதன் வேலை ரேண்டமாக எண்களை உருவாக்கி அனுப்புவதுதான் என்றாலும், நீங்கள் தோல்வி அடைந்ததும் எவ்வளவு துரிதமாக மற்றுமொரு ஆட்டத்தை ஆரம்பிக்கிறீர்கள், பண இருப்பு கரைந்ததும் எவ்வளவு வேகமாக மீண்டும் ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்பதையெல்லாம் வைத்து நீங்கள் அடிமையாகி விட்டீர்களா, இல்லையா என்பதையும் RNG கண்டுகொள்ளும். அடிமை என்று தெரிந்தால் அதன் அரக்க முகம் வெளிவரும். மிகமிகக் கடினமாகத்தான் கார்டுகளை (எண்களை) வழங்கும். மூன்று அல்லது நான்கு தோல்விகளுக்கு இடையே ஒரு சொற்ப வெற்றியைக் கொடுக்கும். காரணம், இது நியாயமாகத்தான் செயல்படுகிறது, என்னுடைய கெட்ட நேரம் என்று உங்களை நம்ப வைக்கும் உத்தி தான் இது. ஆனால் உண்மையில் நீங்கள் எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் வருவீர்கள் என்பதை அது நன்கு அறியும். ஒருவேளை நீங்கள் அன்இன்ஸ்டால் செய்து தப்பித்தாலும், சரியாக மூன்று நாள் கழித்து, போனஸ் பணத்தை க்ரெடிட் செய்திருக்கிறேன் வா என வலை விரிக்கும். ஆகவே அல்காரிதத்தை வென்று பணக்காரனாவது என்பதற்கு வாய்ப்பே இல்லை.

இதிலிருந்து மீள வேண்டும் என நினைப்பவர்களுக்கு, முறையான மனசிகிச்சை இன்றி இந்த மயக்கத்திலிருந்து தப்புவது கடினம். மனதின் ஓரத்தில் இதன் மீதான ஆசை இருந்து கொண்டே இருக்கும். மனைவியுடன் விஷயத்தை சொல்லிவிட்டு ஸ்மார்ட்போனை தூக்கி கடாசி விடுங்கள். நல்ல மனநல மருத்துவரிடம் பேசுங்கள். அதெல்லாம் தேவையில்ல ! நான் சும்மா டைம் பாஸுக்கு என்று இன்னும் மழுப்பினீர்கள் என்றால் கமெண்டில் கொடுத்திருக்கும் இன்ஸ்டாகிராம் இணைப்பை சொடுக்கி மூன்று நாட்கள் முன்பு வரை அவர்கள் வாழ்ந்திருந்த ஆதுரமான வாழ்வை பார்த்து விடுங்கள். எத்தனை நேசம், அன்பு, மகிழ்ச்சி. அதில் ஏதாவது ஒன்றிலாவது இன்னும் இரண்டு நாட்களில் ஆன்லைன் ரம்மி எங்களை அடித்துக் கொல்லப் போகிறது என்பதைக் கணிக்க முடிகிறதா ! இல்லையல்லவா ! சூதை விளையாட்டாய் விளையாடுவோர் அனைவருக்கும் இது பொருந்திப் போகும்.

தமிழக அரசு ஆன்லைன் சூது எனும் அரக்கனை தடை செய்தது. நீதிமன்றம் தடையை நீக்கி மீண்டும் உயிர் தந்தது. இதற்கு முன்பான மரணங்களுக்கு விளையாட்டுப் போதை காரணமாக இருக்கலாம். ஆனால் தடை செய்ததை மீண்டும் உயிர்ப்பித்த பின் நிகழ்ந்துள்ள இக்கொடூரத்திற்கு அல்காரிதமோ, ஆன்லைன் சூது மட்டுமோ காரணமல்ல !

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...