Friday, 17 March 2023

எலி - தென்னமரம்

இந்த எலி இருக்கிறதே சுவையான உணவுகளைத் தேடித்தான் போகும். இன்று எந்த வழியில் போகிறதோ நாளையும் அதே வழியில் தான் போகும். பக்கத்தில் நிறையத் தென்னை மரங்கள் இருந்தாலும் தினமும் நீங்கள் பார்க்கும் மரத்திலேயே தினமும் ஒரு இளநீராகப் பறித்துக் கொறித்துக் குடித்துக் கொண்டிருக்கிறது எலி. இப்படியே விட்டா என் பாடு திண்டாட்டமாகி விடும் என்று புலம்பிக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் பக்கத்துத் தோட்டத்து மாமா வழியில் வந்தவராய் என்ன மாப்ள புலம்பல் என்றார் நான் காரணத்தைச் சொன்னேன். உடனே 'எண்ணிச்செய்யறது செட்டு, எண்ணாமச் செய்யறது வெள்ளாமை' என்ற பழமொழியைக் கூறிக் கொண்டே ஒரு தென்னை ஓலையை மரத்தில் கட்டி விட்டு, நாளை புது இளநி இருந்தா எங்கிட்ட வந்து சொல்லு ' என்று கூறிவிட்டுப் போனார். 

ஒரு வாரம் பார்த்தேன். கொறித்த இளநீர் விழவில்லை. பக்கத்துத் தோட்டத்து மாமனைப் போய் பார்த்து,"என்ன மாமா என்ன மந்திரம் ஓதுனீக ஒரு இளநியும் விழலையே" என்றேன். அதற்கு அவர் , "ஏடு படிச்ச மாப்ள, எலி தினமும் வந்த வழியாத்தான் வரும். பழக்கப்பட்ட வழயில குச்சி கோள் இருந்தா பொறி வச்சிருக்காங்கன்னு குச்சி கோள சுத்தி வரும். தென்ன மரம் வட்டமா இருக்கறதால சுத்திச்சுத்தி வரும் ஆனா ஓலைய தாண்டாது பொறி வச்சிருக்காங்கனு ஓடிடும்" என்று விளக்கம் கொடுத்தார். அதிலிருந்து இளநீர் கொறித்துக் கீழே கிடந்தால் இந்த வைத்தியம் தான்.

குருமார்களை வெளியே தேடவேண்டாம் அருகிலேயே இருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...